பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர பெரும்பாலான கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிக்கின்றன என்றார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு உன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை தனி பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். 

இந்த வழக்கில், பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், செயலர்கள் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, அவர்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிகளுக்கு வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸைப் பெற்ற பின்னரும் பதிலளிக்காத 9 கட்சிகளுக்கு 1 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது அனைத்துக் கட்சிகள் சார்பிலும் வழக்கறிஞர் ஆஜராகி, அபராதத்தை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர். பின்னர் அபராதத்தை நன்கொடையாக செலுத்த உத்தரவிட்டார். 

மேலும் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், இது போன்று நீதிபதிகள் தெரிவிப்பது ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் இது ஜனநாயக நாடு, தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா, யார் வேண்டுமானாலும் பேச உரிமை உண்டு என தெரிவித்தனர்.