முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஆலோசனை கேட்டு ஆட்சி நடத்துவதாக ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் டி. ஆணழகன் கடந்த ஜூன் மாதம், நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவின் ஆலோசனையைக் கேட்பது சட்டவிரோதமானது என்றும் மனுதாரர் ஆணழகன் கூறியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யவும் ஆணழகன் மனுவில் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சட்டப்பேரவை செயலாளரும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அவர்களுக்கு மதுரை கிளை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.