மு.க.அழகிரி தைரியத்தில் அதிமுக... மதுரையை குறிவைக்கும் ராஜ.கண்ணப்பன்...!
மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ராஜ.கண்ணப்பன். ஆனால் இந்த தொகுதியில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கு எதிராக, அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜ.கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை, இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணிகளுக்கான தொகுதிகள் இன்றோ அல்லது நாளையோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளது. இதில் சிவகங்கை தொகுதியை பாஜவுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிட உள்ளது. இந்த தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் காத்திக் சிதம்பரம் அல்லது அவரது மருமகள் ஸ்ரீநிதி களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமநாதபுரத்தில் போட்டியிடலாம் என திட்டமிட்டிருந்தார் ராஜ.கண்ணப்பன். ஆனால், ராமநாதபுரத்தில் அதிமுக சிட்டிங் எம்.பி அன்வர்ராஜாவுக்கு சீட்டு கிட்டதட்ட உறுதியாவிட்டது. இதனையடுத்து ராஜ.கண்ணப்பன் மதுரை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். மதுரை தொகுதியை பொறுத்தவரை இதுவரை நடந்த 16 மக்களவை தேர்தலில் 8 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை கம்யூனிஸ்ட் கட்களும் தமிழ் மாநில காங்கிரஸ், ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரமணிய சுவாமி ஆகியோர் தலா ஒரு முறையும் வென்றுள்ளனர்.
2009-ல் திமுக சார்பில் மு.க.அழகிரியும், 2014-ல் அதிமுகவை சேர்ந்த ஆர்.கோபாலகிருஷ்ணன் கடந்த முறை வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் மதுரை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை தொகுதியில் திமுக அல்லது கூட்டணி கட்சிகள் போட்டியிட்டாலும் அழகிரி எதிர்ப்பு நிலையில் உள்ளதால் உள்ளடி வேலையை செய்து தோற்கடிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அதேவேளை 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.கோபாலகிருஷ்ணன் வென்றார். அந்த நம்பிக்கையிலும், திமுகவை அழகிரி எதிர்ப்பதாலும் எப்படியும் மதுரையில் நின்றால் வெற்றி நிச்சயம் எனக் கருதி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் மதுரை தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.