கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்த மனைவியின் பாசத்திற்கு பரிசாக தன் மனைவியை தன் வீட்டில் இருப்பதன் நினைவாக போட்டோவாக இல்லாமல் சிலை வடித்து தன் பாசத்தை காட்டியிருக்கிறார் தொழிலதிபர் சேதுராமன்.

மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான சேதுராமன். இவரின் மனைவி பிச்சை மணி. திருமணமாகி 48 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் பிச்சைமணி அம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத சேதுராமன் தனது மனைவி தன்னை விட்டுச் சென்றாலும், தனது வீட்டில் அவரது உருவம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைத்தார். 

அதன்படி தற்போது தனது வீட்டில் பைபர் மெட்ரியல் மூலம் செய்யப்பட்ட 6 அடி உயரம் கொண்ட தனது மனைவியின் தத்ரூப சிலையாக வடிவமைத்தார். இதனை மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரை கொண்டு சேதுராமன் வடிவமைத்துள்ளார். இந்த சிலையானது நிரந்தரமாக இருக்கும் வகையில் சேதுராமன் வீட்டுக்குள்ளேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பிச்சைமணி அம்மாள் உயிரிழந்து 30 நாட்கள் முடிந்த நிலையில், அவரது சிலைக்கு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதே போல, சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் தொழில் அதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா என்பவர், மனைவிக்காக வடிவமைத்த சிலிக்கான் சிலை, சமூக வலைதளங்கில் வைரலானது குறிப்பிடத்தக்கது.