மதுரையில் யூடியூப் விமா்சகா் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சூா்யா நகர் பகுதியை சோ்ந்தவா் மாரிதாஸ். யூடியூப் விமா்சகரான இவா்,தனியார் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமா்சித்ததாகவும், அந்நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் மூலம் தவறான செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தரப்பில், சென்னை சைபா் குற்றப்பிரிவில் மாரிதாஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.


ந்நிலையில் சென்னை சைபா் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் சரவணகுமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் மதுரை சூா்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில்  சோதனை நடத்தினா். அங்கு மாரிதாஸிடம் விசாரணை நடத்திய போலீசாருடன் முதலில் மாரிதாஸ் ஒத்துழைக்கவில்லையாம். அதன் பிறகு மாரிதாஸ் வீட்டில் ரெய்டு நடத்துவதற்கான உத்தரவு நகலை காட்டிய பிறகு சம்மதித்திருக்கிறார் மாரிதாஸ்.  அவருடைய கம்ப்யூட்டர், மொபைல்போன் பென்ட்ரைவ்  உள்ளிட்டவைகளை சோதனை செய்தனா். 

 

அதில் உள்ள ஆவணங்களை காப்பி எடுக்க மாரிதாஸ் ஒத்துழைக்கவில்லை. அதன் பிறகு போலீசார் வழக்குகிற்கு தேவையான ஆவணங்களை கட்டாயம் காப்பி எடுத்தாக வேண்டும் என்று தெரிவித்த பின்னர் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார் மாரிதாஸ்.அதன்பிறகு மாரிதாஸ் யூடியூப் சேனலுக்காக பயன்படுத்திய தகவல்கள் அடங்கிய முக்கியமான லேப்டாப் பென்ட்ரைவ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியிருக்கிறார்கள். அதில் உள்ள தகவல்கள் ஆராயப்பட்டு பின்னர் அந்த வழக்கு வலுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சி கொடுத்த புகார்க்கான  ஆவணங்கள் சிக்கினால் மாரிதாஸ் கைது செய்யப்படுவது உறுதி எனத் தெரிகிறது.
 சுமார் 8மணி  நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் சோதனை நீடித்தது. அதன் பின்னா் போலீஸார் சென்னை புறப்பட்டு சென்றனா். இந்த சோதனை குறித்தும், மாரிதாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீஸார் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

முன்னதாக, சைபா் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த வந்தபோது, சோதனை செய்ய உரிய ஆவணங்கள் இருக்கிறதா எனக் கேட்டு போலீஸாருடன் மாரிதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விசாரணைக்கான உத்தரவுகளை அவரிடம் தெரிவித்த போலீஸார் பின்னா் சோதனையில் ஈடுபட்டனா்.

மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா். இதையடுத்து போலீஸார் சோதனையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனா். மாரிதாஸிடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.