புழலில் இருந்து வெளியே வருவதில் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.! ஜாமீன் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விசாரிக்க முடியாத என மறுப்பு தெரிவித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிமதி அல்லி, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சுமார் 10 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த செந்தில் பாலாஜியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமின் மனு தாக்கல்
அப்போது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை எம்.பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதனையடுத்து செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ய அறிவிறுத்தினார். இதனையடுத்து நேற்றைய தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல்
இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுக்க மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதி அல்லி பார்க்கலாம் என தெரிவித்தார். இந்தநிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு பட்டியலிடாத காரணத்தால் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டார். அப்போது நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால், தன்னால் ஜாமின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்தார். எனவே அங்கு சென்று ஜாமின் மனு தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பு நீதிமன்றத்தை நாடினர். அப்போது சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, இந்த ஜாமின் மனுவை விசாரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளதா என உயர்நீதிமன்றம் தெரிவித்தால் மட்டுமே விசாரிக்க முடியும் என தெரிவித்தார். இதனையடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்