சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றும் பலியும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. தமிழக அரசும் பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருந்தாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொற்றை குறைக்க  சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த லாக்டவுனில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமுடக்கம் தமிழக அரசு அறிவித்துள்ளது.  மின் கணக்கீடு செய்யப்படவில்லை. அதற்கு பதில், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதம் செலுத்திய கட்டணம் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம்.பின்னர் மின்சார கணக்கீடு செய்யும் போது, 2 இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்திய தொகையை கழித்து விட்டு, பாக்கி தொகைக்கு பில் செலுத்த வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பதில் மனு தாக்கல் செய்தது.

"வீடுகளில் மின் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள முடியாவிட்டால் முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்க விதிகள் உள்ளது. எனவே கட்டண நிர்ணயத்தில் விதிமீறல் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின் கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது" என்பது குறித்து இரு தரப்பும் எழுத்துபூர்வமான வாதங்களாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.