உயர்நீதிமன்ற உத்தரவை மீறி யார் செயல்பட்டாலும், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹட்சன், விஜய் பால் நிறுவனங்களில் வேதியல் பொருள் கலக்கப்படுவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மே மாதம் 24 ஆம் தேதி குற்றம் சாட்டியிருந்தார்.

ராஜேந்திர பாலாஜியின் குற்றச்சாட்டை அடுத்து, தனியார் பால் நிறுவனங்கள், பாலில் கலப்படம் செய்வதாக ஆதாரமின்றி தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆதாரம் இன்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசக்கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் அண்மையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பதில் அறிக்கை தாக்கல் செய்ய பால் நிறுவனங்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி அமைச்சரின் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. வழக்கு விசாரணை நாளை பிற்பகலுக்கு உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டது.