madhusoodhanan warns to edappadi palanisamy against jayakumar

ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ஜெயகுமார் சுணக்கம் காட்டியதே தோல்விக்குக் காரணம் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் ஆளும் கட்சி, அதிமுகவின் சின்னம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், 48,306 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற நிலையில், தனது தோல்விக்கு அமைச்சர் ஜெயகுமாரே முக்கியக் காரணம் என குற்றம் சாட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார். 



அதில், இந்த நிமிடம் வரையில் கழகம், இடைத் தேர்தலில் தோற்றது குறித்து எந்த ஆய்வுக் கூட்டமும் நம் தரப்பிலிருந்து நடத்தப்பட வில்லையே அது ஏன்? அம்மா இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா? ஆர்.கே. நகர்த் தொகுதிக்கான தேர்தலில் வார்டு 38-ல் நான்கு பாகமும், 43-ல் ஐந்து பாகமுமாக 9 பாகங்கள் மந்திரி ஜெயகுமார் பொறுப்பில் கொடுத்தீர்களே... ஒன்பதாயிரத்து, 500 வாக்குகள் இருக்கிற இந்த இடத்தில் நாம் வாங்கிய வாக்குகள் வெறும் 1,800 தானே? அதை ஏன் என்று கேட்டீர்களா? மூத்த மந்திரி ஜெயகுமாரே இப்படி 'வேலையில் சுணக்கம்' காட்டியதைப் பார்த்த மற்ற பொறுப்பாளர்கள், முதல்நாளே அவரவர் ஊர்களுக்குக் கிளம்பிப் போய் விட்டது உங்களுக்குத் தெரியுமா?

அம்மா மட்டும் இன்று இருந்திருந்தால், தொகுதியில் வேலை பார்த்த மந்திரிகள், மாவட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு அனைவரின் பதவியும் பறி போய் இருக்குமே. பொதுத்தேர்தல் முடிவையே அம்மா மன்னிக்க மாட்டார்கள். இடைத்தேர்தல் முடிவை அம்மா அவர்கள் ஏற்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 



இவ்வாறு 14 கேள்விகளை எழுப்பியுள்ள மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார் மீது 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு திருப்தியைத் தரக் கூடிய அளவில் உங்கள் பதில் இல்லையென்றால் 'தன்னிச்சை' யாக நானே, கட்சியில் சில முடிவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்..." என எச்சரித்துள்ளார்.