நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த துறைமுகம்-மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

கடந்த திமுக ஆட்சியில் துறைமுகம்-மதுரவாயில் இடையே பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல வழி பிறக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தொடர்ந்து ஜெயலலிதா ஆட்சி அமைந்ததால் கடந்த 6 ஆண்டுகளாக துறைமுகம்-மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கிடப்பில் போடப்பட்டிருந்த பல திட்டங்கள் தற்போது விரைவு படுத்தப்பட்டு வருகின்றன.

உதாரணமாக உதய் மின் திட்டம், ஜிஎஸ்டி திட்டம், உணவு பாதுகாப்பு சட்டம் போன்றவற்றிற்கு தமிழக அரசு தொடர்ந்து தனத ஒத்துழைப்பை தந்து வருகிறது.

இதனிடையே நேற்று பிரதமரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கித் தரும்படி கோரிக்கை விடுத்தார்,

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை ஆதலமைச்சர் இன்று சந்தித்துப் பேசினார்.

அப்போது துறைமுகம்-மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, துறைமுகம்-மதுரவாயில் பறக்கும் சாலை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய,மாநில அரசுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.