சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அரசு நிறுவனமான சிட்கோவுக்கு உரிய வீட்டுமனையை, முனனாள் மேயர் மா.சுப்பிரமணியன் தனது மனைவி பெயரில் மாற்றம் செய்து மோசடி செய்திருக்கிறார் என்று பாத்திபன் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடரப்பட்ட நேரத்தில் அப்போதைய சிட்கோ உயரதிகாரியை அழைத்த தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ‘மா.சுப்ரமணியன் மீதான இந்த வழக்கை வைத்து அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை சட்ட ரீதியாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த அதிகாரியோ, இந்த வழக்கில் மா.சுப்பிரமணியன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை, அப்படி செய்தால் நீதிமன்றத்தில் நிற்காது என்று கருத்து சொல்லியிருக்கிறார். அதனால் அந்த அதிகாரியை உடனடியாக சிட்கோவை விட்டு அகற்றிவிட்டு, ஹேன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். சிட்கோ தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் மா.சுப்பிரமணியன் இந்த வழக்கில் தன்னை காவல்துறை கைது செய்யும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்தார். அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 25 ஆம் தேதி மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கியது. மேலும், விசாரணை அதிகாரி அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராகவேண்டும், சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது.

இந்த நிலையில்தான் நில மோசடிப் புகாரின் மீதான விசாரணைக்காக மா.சுப்பிரமணியன் வரும் ஜூலை 27 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து சுப்ரமணியனின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.