’இந்நேரம் மட்டும் ஜெயலலிதா இருந்திருந்தால்?!’ என்று அவர் ஏங்க வைத்திருக்கும் தருணங்கள் இந்த ஒண்ணேகால் ஆண்டில் அ.தி.மு.க.வில் ஏகப்பட்டவை. ஆனால் நடராஜன் இறந்துவிட்ட சூழலில் ’ஜெயலலிதா இருந்திருந்தால்?!’...என்று நினைக்க வைப்பது சற்றே வித்தியாசமான மட்டுமல்ல விவகாரம் பொதிந்த சிந்தனையும் கூட.

எம்.நடராஜன் எனும் அ.தி.மு.க.வின் நிழல் அதிகார மையம் தன் பொதுவாழ்க்கையை துவக்கியது ஒரு அரசுப்பணியாளராகத்தான். மக்கள் செய்தி தொடர்புத் துறையில் துணை மக்கள் தொடர்பு அதிகாரியாகத்தான் அரசு கட்டமைப்புக்குள் கால் எடுத்து வைத்தார். நடராஜன் - சசிகலா திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்!

நடராஜன் பழகிய மனிதர்கள், அவரது இரத்தத்திலிருந்த திரை மறைவு அரசியல் குணம் ஆகியவை அவரை மெதுவாக உச்ச நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தன. உச்ச நடிகையாக இருந்தாலும் கூட அப்பா-அம்மா ஆதரவில்லாமல் தனியாக வசித்து வந்த ஜெயலலிதாவுக்கு சினிமா வீடியோ கேசட் சப்ளை செய்யும் பெண்ணாக சசிகலா போயஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பின்னணியில் நடராஜன் உண்டு என்பது உண்மை.

தன் மனைவியை ஜெயலலிதாவின் தோழியாக, உடன்பிறவா சகோதரியாக தாரைவார்த்துக் கொடுத்திட எத்தனை பேருக்கு துணிச்சல் வந்துவிடும்!? ஆனால் செய்தார் நடராஜன்.

பிற்காலத்தில் ஜெயலலிதா தமிழகத்தின் அசைக்க முடியாத முதல்வராவார், தன் மனைவி நிழல் முதல்வரளவுக்கு உயர்வார்! அதன் மூலம் தன் மற்றும் தன் மனைவியின் சொந்த பந்த வகையறாக்கள் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் என்று நடராஜன் மிகப்பெரிய ஃபோர்விஷனுடன் திட்டமிட்டிருக்க வாய்ப்பில்லை! ஆனால் எல்லாம் நடந்தது.

ஜெயலலிதாவால் நடராஜன் பெற்றது ஏராளம் என்றால், இழந்தது தாராளம். கட்டிய மனைவியை இழந்தார். தங்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டுமென்று கூட சசியும், நடராஜனும் திட்டமிட்டுக் கொள்ளவில்லை.

நடராஜனை காண சசிகலா செல்லக்கூடாது! என்பதில் ஜெயலலிதா திட்டவட்டமாக இருந்தார், உத்தரவிட்டிருந்தார் என்பார்கள். அது எந்தளவுக்கு உண்மையோ ஆனால் அ.தி.மு.க.வின் அதிகார மையாமாக நடராஜன் இல்லை! என்பதை எந்த அ.தி.மு.க. நிர்வாகியும் ஏற்றுக் கொண்டதில்லை.

அதனால்தான் தேர்தல் காலங்களில் அவரது பெசண்ட் நகர் இல்லத்தை பெரும் படையே ‘சீட் வாங்கி தாங்க தலைவரே!’ எனும் கோரிக்கையுடன் முற்றுகையிடும். நடராஜனுக்கென்று ஒரு கோட்டா ஒவ்வொரு தேர்தலிலும் ஒதுக்கப்படும் என்பார்கள்! ஹிட்டடித்த அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் அடி நாதமே நான் தான்! என்று ஜெயலலிதா இருக்கையிலேயே பல முறை நடராஜன் காலர் தூக்கி விட்டிருக்கிறார், அதை ஜெ., மறுத்ததுமில்லை.

எது எப்படியோ, நடராஜன் இப்போது காலமாகியிருக்கிறார், அவரது மனைவி சசிகலா சிறையிலிருக்கிறார். இவர்களுக்கு நடுவில் வாழ்ந்த உடன்பிறவா சகோதரி ஜெயலலிதா எப்போதோ அமரர் ஆகிவிட்டார். இது யதார்த்தம்.

ஆனால் ஆட்டத்தை சற்றே மாற்றியமைத்து பாருங்கள், ஜெயலலிதா இறந்திருக்காமல், சசிகலா உள்ளே போயிருக்கமால், இந்த சூழலில் நடராஜன் இறந்திருந்தால் அவரது மரணத்துக்கு ‘மனைவி’ எனும் முறையில் சென்று சடங்குகளை செய்திட சசியை, ஜெ., அனுமதித்திருப்பாரா?! இதுதான் மீடியாக்களின் வாயில் பெரிய அவலாக இருந்திருக்கும்.

இதற்கான விடை, ஜெயலலிதா சொல்லியதால் கெசட்டிலேயே அதிகாரப்பூர்வமாக தன் பெயரிலிருந்து நடராஜனை விலக்கி வைத்த சசிகலாவின் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.