எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட தயாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
இடைத்தேர்தலையொட்டி விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் மாறிமாறி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார். நாங்குநேரியில்  காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். ரெட்டியார்பட்டியில் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னுடன் போட்டியிட தயாரா என்று கேள்வி எழுப்பினார்.

 
 “தமிழகத்தில்  நடைபெற்றுவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மத்திய அரசின் எடுபிடி அரசாக செயல்பட்டு வருகிறது. இதைச் சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. அதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்கிறேன். கருணாநிதி ஆட்சியின்போது நீட் தேர்வை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்தது. இதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றார். ஆட்சி மாற்றத்துக்கு பிறகு ஜெயலலிதாவும் நீட் தேர்வை எதிர்த்தார். அவர் முதல்வராக இருந்தவரையும் நீட் தேர்வு தமிழகத்தில் நுழையவில்லை. தற்போதைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்துவிட்டது. அப்படியென்றால் இது பாஜகவின் அடிமை ஆட்சிதானே?


சுவிஸ் வங்கியில் நான் பணம் பதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசிவருகிறார். அதை நிரூபித்துவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு நான் தயார். அரசியலை விட்டே விலகவும் தயார் என்று நான் பதில் கூறினேன். அதே நேரம் நிரூபிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி ஊரை விட்டு ஓட வேண்டும் என்று கூறினேன். நான் கேட்ட கேள்விக்கு எடப்பாடியிடம் இருந்து இதுவரை பதில் இல்லை.


எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வர் ஆனார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் என்கிறார்.  அண்ணா, கருணாநிதி, பக்தவச்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள். இவர் விபத்தால்வந்த முதல்வர். இதை சொன்னால் அவர் என்னை பற்றி ஆவேசமாக விமர்சிக்கிறார். தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சனம் செய்கிறார்.  நாங்குநேரியிலிருந்து நான் சவால் விடுகிறேன். எடப்பாடி பழனிசாமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யட்டும். நானும் செய்கிறேன். ஏதேனும் ஒரு  தொகுதியில் என்னுடன் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தயாரா? அப்படி போட்டியிட்டால் அப்போது மக்களின் முதல்வர் யார் என்பது  தெரியும்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.