பதவி போனதும் இருவரும் ஆளுக்கொரு திசையில் போய்விடுவார்கள். அவர்கள் எந்தத் திசைக்கு போனாலும், எங்கே தலைமறைவு ஆனாலும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமாக இருந்தாலும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரமாக இருந்தாலும், லஞ்ச லாவண்ய வழக்குகளாக இருந்தாலும் - அவை சட்டபூர்வமாக நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தேனி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், “இன்றைய ஆட்சிக்கு இப்படி எந்த இலக்கணமும் இல்லை. கலெக்சன், கமிஷன், கரெப்சன் ஆகிய மூன்றும்தான் இவர்களது இலக்கணம். அதனால்தான் அ.தி.மு.க. ஆட்சியானது எத்துணை அலங்கோல ஆட்சியாக இருக்கிறது என்பதை பேராசிரியர் அருணன் அவர்கள் சொன்னார்கள். ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தி.மு.க. ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அ.தி.மு.க. ஆட்சி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இவை மக்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சண்டை போடுவதைப் போன்ற ஒரு நாடகத்தை நடத்தி மக்களை திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். பதவி இருக்கும் வரை இவர்கள் இருவரும் பிரிய மாட்டார்கள். அவர்களுக்குள் சண்டை என்பதெல்லாம் மக்கள் முன்னால் நடத்தப்படும் நாடகங்கள். இதே பன்னீர்செல்வம் தான், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொல்லி தர்ம யுத்தம் தொடங்கினார். இன்று அவரே அந்த விசாரணைக்கு தடையாக அதர்ம யுத்தம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததாகச் சொல்லப்பட்டது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி. போயஸ் கார்டன் வீட்டில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டது செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு. இடைப்பட்ட 73 நாட்கள் அவர் எப்படி இருந்தார் என்பது வெளியில் இருக்கும் நம் யாருக்கும் தெரியாது. தனக்கே தெரியாது என்று பன்னீர்செல்வம் சொன்னார். சசிகலா குடும்பத்துக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மட்டும்தான் தெரியும் என்று சொன்னார்.