திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை தன் கையில் வைத்துகொள்ள அதிரடியாக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10 அன்று நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளார் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தேர்தல் வெற்றி, வேலூர் தேர்தல் வெற்றி, இடைத்தேர்தல் தோல்வி என பல விஷயங்கள் இந்த ஓராண்டில் நடைபெற்றுள்ளதால், இதைப்பற்றி பொதுக்குழு கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் மிக முக்கியமாக பொதுச்செயலாளரின் அதிகாரம் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற தகவல் திமுகவில் பலமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


திமுக பொதுச்செயலாளராக உள்ள 97 வயதான க. அன்பழகன், கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். குறிப்பாக கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவருடைய உடல்நிலை சீராக இல்லை. கடைசியாக 2017ல் ஸ்டாலினை செயல்  தலைவராக நியமிக்க நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் க. அன்பழகன் பங்கேற்றார். அதன் பிறகு கட்சி கூட்டங்கள் எதிலும் அவரால் பங்கேற்கமுடியவில்லை. வயது முதிர்வு, உடல்நலம் பாதிப்பு போன்ற காரணங்களால் தொடர்ந்து வீட்டியே ஓய்வில் இருந்துவருகிறார் அன்பழகன். இதன் காரணமாகவே பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரத்தை தன்னிடம் வைத்துகொள்ள ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “கட்சியின் விதிகளில் பொதுச்செயலாளர் நீண்ட நாட்களாக அவருடைய பணியை செய்ய முடியாத நிலையில் இருந்தால், அந்தப் பதவியின் அதிகாரத்தை தலைவர் வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விதியின்படி ஸ்டாலின் பொதுச்செயலாளர் பதவியின் அதிகாரத்தை வைத்துக்கொள்வார்” என்று தெரிவித்தன.


அதேவேளையில் அதுபோன்ற நகர்வு திமுகவில் இல்லை என்று இன்னொரு தரப்பும் கூறுகிறது. கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது அவரது இறுதிக் காலம் வரை கட்சியின் தலைவராகவே இருந்தார். அதேபோல கருணாநிதியின் உற்ற நண்பரான க. அன்பழகனும் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பார் என்றும் கட்சியில் பேசப்படுகிறது. இந்த விஷயத்தில் என்ன முடிவை எடுப்பார்கள் என்பது உறுதியாகத நிலையில், மு.க. ஸ்டாலின் பொதுச்செயலாளார் அதிகாரத்தை  வைத்துக்கொள்ளும் வகையில் பொதுக்குழுவில் பேசப்படும் என்ற கருத்து திமுகவில் சூடுபிடித்துள்ளது.