இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, அண்ணாவின் திருப்பெயரைக் கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சகட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் - சமூகநீதிக்கும் - இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் - எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாகப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழகத்தை ஆளும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ, எதிர் நடவடிக்கை பாய்ந்துவிடுமோ, என்றெல்லாம் எண்ணி, பயந்து, பதுங்கி, அமைதி காப்பது, தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிப்பதாகும்.

