கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கையில் 11,000 இடங்களை இழந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் சமூக அநீதியைக் கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) சுமார்  11 ஆயிரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் கொடுத்துள்ளது. இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துவருகிறார்கள்.


இந்நிலையில் மருத்துவ சேர்க்கை விவகாரத்தில் இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்ற வேண்டும் என மோடி அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன்! பல் மருத்துவம், மருத்துவப்படிப்புகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான நீட் இடஒதுக்கீட்டில்- பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான இடங்களை மத்திய அரசு தடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 11,000 இடங்களை அவர்கள் இழந்துள்ளனர். அரசியல் சட்டத்தின் உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பாதுகாத்திட வேண்டும் எனப் பிரதமரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.