அரசியல் சட்டம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட நினைத்த அதிமுக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு சம்மட்டி அடி என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு விடப்பட்டுள்ள அதிமுக அரசின் டெண்டர்களை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள மகத்தான தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன். அரசியல் சட்டம் தந்துள்ள பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட நினைத்த அதிமுக அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சம்மட்டி அடி. தொடர்ந்து நடத்திவரும் ஊழல் நிர்வாகத்தின் ஒருகட்டமாக, பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரத்தைக் கைப்பற்றி, தனது ‘கைப்பாவைகளாக’ மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஆக்கி, கொள்ளையடிக்க நினைத்த முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஊழல் அரசின் தலையில் ஓங்கி வைக்கப்பட்டுள்ள சரியான குட்டு.


நீண்ட நாட்களாகத் தேர்தலை நடத்தாமல் - தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக, இறுதியில் தேர்தல் நடைபெற்று - ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்ட பிறகும் - அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்ற பிறகும் - தெருவிளக்குகள் போடுவதில் இருந்து - குடிநீர்க் குழாய்கள் அமைப்பது வரை, அனைத்து அதிகாரங்களையும் பறித்து, அப்பணிகளைத் தானே மேற்கொள்வதன் மூலம், அதிமுக அரசு, அபகரித்துக் கொள்ள நினைத்தது கீழான செயல். ‘இ-டெண்டர்’ என்ற ஒரு ‘ஊழல் டெண்டர் நடைமுறை’ மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களைப் பயன்படுத்தி – ஊராட்சி நிதியில் மெகா ஊழல் செய்தும் - செய்யவும் துடித்து வருகிறது அதிமுக அரசு. இதனால்தான் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.
இந்த வழக்கு விசாரணையின்போது, ‘ஊராட்சிகளுக்கு டெண்டர் விடும் அனுபவம் இல்லை’ என்றெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைப் பெரிதும் அவமதிக்கும் வகையில், உயர் நீதிமன்றத்தில் ஊரக வளர்ச்சித்துறையே வாதிட்டது, அமைச்சரின் ஊழலுக்கு ஒத்துழைக்கும் அசிங்கம். ஊராட்சி மன்றங்களில் நடைபெற வேண்டிய கிராம சாலை மேம்பாட்டுப் பணிகளுக்குக்கூட- நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளரும், வட்டார வளர்ச்சி அலுவலரும் இணைந்து பணிகளை முடிவு செய்தது அராஜகத்தின் உச்சகட்டம்.