மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இ ந் நிலையில் அவர் இன்று இந்தி மொழி தொடர்பாக ட்விட்டரில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி மொழி. நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்துக்கான புரட்சி ஏற்பட்டதிலிருந்தே  ஒட்டுமொத்த மக்களையும் ஓரணியில் ஒன்றாக திரட்டுவதற்கு இந்தி சக்தி வாய்ந்த ஊடகமாக பயன்பட்டு வருகிறது. அதன் அசல் தன்மையும் எளிமையும்தான் இந்தி மொழியின் பலம். இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளின் சமமான வளர்ச்சியை கருத்தில்கொண்டே மோடி அரசு புதிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், “இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது! இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.