பாஜக அரசு வாய் பேசுவதை விடுத்து, வேலை இழப்பு, தொழில் துறை வீழ்ச்சி குறித்து உண்மையான பிரச்னைகளைப் பேசத் தொடங்குமா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய பொருளாரம் சரிந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் மாதத்துக்கு முன்புவரை 5.8 சதவீதமாக இருந்த ஜிடிபி 5 சதவீதமாக பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. 2019 - 2020-ன் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தச் சரிவை இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ளது.


மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவந்த நிலையில், ஜிடிபி சரிவை பல தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பொருளாதார மந்த நிலை, ஜிடிபி சரிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை நிலவிவருவது, ஜிடிபி வீழ்ச்சியடைந்ததன் மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளது. வேலையிழப்பு, தொழில்துறை பிரச்னைகளில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போதாவது பாஜக அரசு வாய் பேசுவதை விடுத்து, உண்மையான பிரச்னைகளைப் பேசத் தொடங்குமா?'' என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.