மீடியாக்களை அவதூறாகப் பேசிய திமுக எம்.பி.யை வருத்தம் தெரிவிக்கும்படி அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பல சர்ச்சையான கருத்துகளைப் பேசினார். மீடியாக்கள் உள்பட பல அவதூறான கருத்துகளை வெளிப்படுத்தினார். தலித் சமுதாயத்துக்கு பதவி உயர்வு கலைஞர் போட்ட பிச்சை என்றும் பேசியதாகவும் தகவல் வெளியானது. பிரசாந்த் கிஷோர் எங்களுடன் இணைந்தால், உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது? இதெல்லாம் ஒரு விவாதப்பொருளா என செய்தித் தொலைக்காட்சிகள் குறித்து மிகவும் அவதூறாகப் பேசினார்.


ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சுக்கு பத்திரிகை அமைப்புகள், தலித் அமைப்புகள் உள்பட பல அமைப்புகள் ஆர்.எஸ். பாரதிக்கு கண்டனம் தெரிவித்தார்கள். ஆர்.எஸ். பாரதியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் பத்திரிகை சங்கங்கள் வலியுறுத்தின. இந்நிலையில் தான் பேசிய பேச்சுக்கு ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில், “பிப்ரவரி 14 அன்று சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் நான் பேசிய சில வார்த்தைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்தியதாக அறிகிறேன். அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
மீடியாக்களை இழிவாகப் பேசியது பற்றி ஆர்.எஸ். பாரதி வருத்தம் தெரிவிக்காத நிலையில், இந்த விவகாரம் திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. பின்னர் ஆர்.எஸ். பாரதியிடம் பேசிய ஸ்டாலின், வருத்தம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஊடகங்கள் முன்னிலையில் தனது பேச்சுக்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கலைஞர் வாசகர் வட்டத்தில் நான் பேசியது  காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நோக்கத்தோடு திருத்தி பரப்பப்பட்டுவருகிறது. பெரியார் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் எச்.ராஜா போன்றவர்கள் விமர்சிப்பதை பார்த்து மனம் தாங்காமல் ஒரு சில வார்த்தைகள் பேசினேன், அந்த வார்த்தைகள் யாருக்கும் மன வருத்தத்தையோ, கஷ்டத்தையோ கொடுத்து இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.


உள்நோக்கத்தோடு புண்படுத்தும் நோக்கத்தில் எந்த ஊடகத்தை பற்றியும் பேசவில்லை. தவறாகவும் சொல்லவில்லை. இதுகுறித்து தலைவர் கேள்விப்பட்டு உடனடியாக ஊடகங்களை சந்தித்து வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கூறிய காரணத்தாலும், நானும் அதை தவறென்று உணர்ந்ததாலும் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.