Asianet News TamilAsianet News Tamil

இப்பவே தேர்தல் தோல்வியை ஒத்துக்கிட்டீங்க... முதல்வர் எடப்பாடியை காய்ச்சி எடுத்த மு.க. ஸ்டாலின்!

கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என்று திணறிக் கொண்டிருக்கும் அதிமுக அரசின் அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பதில் ஒட்டுமொத்தமாகக் குழப்பமடைந்து, இறுதியில், ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை, மக்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிகளுக்கு “மறைமுகத் தேர்தலோ” அல்லது “நேரடித் தேர்தலோ” - எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது. இதுமாதிரி எந்த வகையான தேர்தல்களையும் சந்தித்து வெற்றி பெற்ற அனுபவம் திமுகவுக்கும், தொண்டர்களுக்கும் நிரம்ப இருக்கிறது. அந்த வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலையும் ஜனநாயக ரீதியில் தீரத்துடன் சந்திப்போம்!

M.K.Stalin on Local body election act change
Author
Chennai, First Published Nov 20, 2019, 10:03 PM IST

மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவியிலோ வெற்றி பெற முடியாது என்பதை தேர்தலுக்கு முன்பே முதல்வர் ஒப்புக் கொண்டுவிட்டதைத்தான், இந்த மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் எதிரொலிக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

M.K.Stalin on Local body election act change
“மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்று அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
வரலாறு காணாத ஊழல் சகதியில் சிக்கியிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு நேரடித் தேர்தல் வைத்தால், திமுக அமோக வெற்றி பெற்றுவிடும் என்றும், உள்ளாட்சித்துறை ஊழல்கள் ஒவ்வொன்றும் வெட்டவெளிச்சத்திற்கு வந்து ஊரே நாறிவிடும் என்றும் அமைச்சர் வேலுமணியும், அவரைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள். ஆக, தங்கள் ஊழல்களை மறைத்துக் கொள்ள, ஜனநாயகத்தை, குறிப்பாக உள்ளாட்சி ஜனநாயகத்தை, திட்டமிட்டு பட்டப்பகலில் படுகொலை செய்திருக்கிறார்கள்.

M.K.Stalin on Local body election act change
பணம் கொடுத்து, பரவலாக அதிகார துஷ்பிரயோகம் செய்து இரு இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றியால் அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு பெருகிவிட்டது என்று ‘கற்பனை’யான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர், இப்போது களத்தில் நிலவும் உண்மையைப் புரிந்துகொண்டுவிட்டார். நேரடித் தேர்தல் என்றால், அதிமுக எந்த ஒரு மேயர் பதவியிலோ நகராட்சித் தலைவர் பதவியிலோ, பேரூராட்சித் தலைவர் பதவியிலோ வெற்றி பெற முடியாது என்பதையும், மக்கள் அதிமுகவை அடியோடு நிராகரிப்பார்கள்; வேரொடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி விடுவார்கள் என்பதையும் புரிந்துகொண்டுவிட்டார். தேர்தலுக்கு முன்பே முதல்வர் படுதோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டதைத்தான், இந்த மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் எதிரொலிக்கிறது.

M.K.Stalin on Local body election act change
2018-ல் நேரடித் தேர்தல் என்று சட்டம் கொண்டு வந்தபோது, “சொந்த வார்டில் மேயர் எப்போதுமே கவனம் செலுத்துவார். மெஜாரிட்டியை அனுசரித்துப் போக வேண்டும் என்பதால் தனித்து இயங்கி சேவை செய்ய முடியாது. ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குத் தேவையான முடிவை சுலபமாக எடுக்க முடியாது” என்றேல்லாம் இதே அதிமுக அரசு சொன்னது. ஆனால், இப்போது, “மெஜாரிட்டி கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால்தான் மன்றத்தில் முடிவுகளை எடுக்க முடியும்”, “நிலையான மற்றும் கூட்டுப் பொறுப்பு வாய்ந்த உள்ளாட்சி அமைப்புகளாகவும் இருக்கும்” , “உள்ளாட்சி அமைப்புகளில் ஒற்றுமையாகச் செயல்பட முடியும்” என்றெல்லாம், அப்படியே “அந்தர் பல்டி” அடித்து, இட்டுக் கட்டிய சில காரணங்களை மறைமுகத் தேர்தலுக்கான அவசரச்சட்டத்தின் நோக்கங்களாகக் கூறியிருக்கிறது.

M.K.Stalin on Local body election act change
சில நாட்களுக்கு முன்பு, “மேயர்கள் நேரடியாகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கும், இன்று “மறைமுகத் தேர்தல்” என வெளிவந்துள்ள அவசரச்சட்டத்திற்கும் என்னே வேறுபாடு! “மேயர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கவில்லை” என்று இன்று மதியம் பேட்டியளித்த துணை முதல்வருக்கும், அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கும் துறை அமைச்சரான வேலுமணி மற்றும் முதல்வர் ஆகியோருக்கும் மிகப்பெரிய வேறுபாடு!!

M.K.Stalin on Local body election act change
கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் என்று திணறிக் கொண்டிருக்கும் அதிமுக அரசின் அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பதில் ஒட்டுமொத்தமாகக் குழப்பமடைந்து, இறுதியில், ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை, மக்களின் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. உள்ளாட்சிகளுக்கு “மறைமுகத் தேர்தலோ” அல்லது “நேரடித் தேர்தலோ” - எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறது. இதுமாதிரி எந்த வகையான தேர்தல்களையும் சந்தித்து வெற்றி பெற்ற அனுபவம் திமுகவுக்கும், தொண்டர்களுக்கும் நிரம்ப இருக்கிறது. அந்த வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலையும் ஜனநாயக ரீதியில் தீரத்துடன் சந்திப்போம்!” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios