முதல்வர், துணை முதல்வர் மீதும் ஊழல் புகார்கள் இருக்கின்றன. இதையெல்லாம் வைத்துதான் மத்திய அரசு, அதிமுக அரசை மிரட்டி வருகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அத்தொகுதியில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்தப் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் எங்களை ஆதரித்தீர்கள். அதேபோல இந்த இடைத்தேர்தலிலும் ஆதரவு அளிக்க வேண்டும். இத்தொகுதி மக்கள் என்னிடம் பெரும்பாலும் சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதியைத்தான் கேட்டு கோரிகை வைக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பதுதான்.


கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர்கள் இருந்திருந்தால் இந்தக் கோரிக்கைகளை அவர்களிடம் வைத்திருப்பீர்கள். அவர்களும் பிரச்சினையை தீர்த்திருப்பார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இத்தனை காலம் தாழ்த்தி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக வழக்கு போட்டது என்று அதிமுகவினர் சொல்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்குங்கள் என்றுதான் திமுக வழக்குப்போட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெற்றுவிடும் என்ற தோல்வி பயத்தால் அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை.
திமுக ஆட்சியில் இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன்கூடிய கடன் வழங்கப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நானே பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று பெண்களுக்கு சூழல் நிதியை வழங்கியிருக்கிறேன். தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். மத்திய பாஜக அரசின் அடிமை ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டுவருகிறது. 
இங்கே உள்ள அமைச்சர்கள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வந்துள்ளன. முதல்வர், துணை முதல்வர் மீதும் ஊழல் புகார்கள் இருக்கின்றன. இதையெல்லாம் வைத்துதான் மத்திய அரசு, அதிமுக அரசை மிரட்டி வருகிறது. மக்களுக்கு எதிரான எல்லா திட்டங்களும் தமிழகத்தில்தான் திணிக்கப்படுகின்றன. இதை தமிழக ஆட்சியாளர்களால் தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.