நாமக்கல் மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நீட் தேர்வால் சாதாரண, சாமானிய ஏழை மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்து போய்விட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு ஓரளவுக்காவது இடம் கிடைப்பதற்காக 7.5 சதவீத இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார்கள். அதற்கு 40 நாட்களாகியும் தமிழ்நாட்டு ஆளுநர் இதுவரையில் அனுமதி கொடுக்கவில்லை. அனுமதி கொடுக்காத ஆளுநரை முதல்வர் தட்டிக் கேட்கவில்லை. எனவே இரண்டு பேரும் சேர்ந்து ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இரண்டு பேரின் முகத்திரையைக் கிழிப்பதற்காக  ஆர்ப்பாட்டத்தை இன்று நாம் நடத்தினோம்.

 
அவர்கள் நாடகம் ஆடுவதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஒரு வாரத்திற்குள் ஆளுநர் அனுமதி தரவில்லையென்றால் இந்த ஆண்டு மொத்தம், அரசுப் பள்ளி மாணவர்கள் 8 பேர்தான் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியவில்லை என்பதே எவ்வளவு கொடுமையானது. எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோரும் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம்தான் திமுக. இடஒதுக்கீடு கொடுத்தால்தான் சாமானியர், சாதாரண மக்கள் பள்ளி, கல்லூரிகளில் நுழைய முடியும்.

 
'நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன்' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால், இருக்கும் வருமானத்தை மட்டுமல்ல, விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தையும் பறிக்கத் திட்டம் போடுகிறார். இதனை எடப்பாடி பழனிசாமி எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், அந்தத் துணிச்சல் இருக்கிறதா? இல்லை. நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தது அதிமுக தனது நாற்காலியைக் காக்க விவசாயிகளை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி. இந்த பச்சைத் துரோகத்தை மறைக்கவே பச்சைத் துண்டு போட்டு நடிக்கிறார் பழனிசாமி.

 
நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி விவசாயச் சட்டங்களை எதிர்த்திருக்க வேண்டாமா? அவர் விவசாயி அல்ல; விவசாயியைப் போல வேஷம் போடுபவர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிவிட்டது. ‘விவசாயி, விவசாயி’ என்று சொல்லிக் கொண்டால் போதாது. விவசாயியைப் போல நடக்க வேண்டும், விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும். விவசாயிகளுக்காக திட்டம் போட வேண்டும். அப்போதுதான் விவசாயி என்று சொல்லிக் கொள்ள முடியும். அது இல்லாமல் மக்களிடம் நாளுக்கு ஒரு வேடம் போட்டு நடிக்கக் கூடாது.” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.