கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு என்று தமிழக அரசை திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக தமிழக அரசு நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எனவே, ஒரு வார காலத்துக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்க உள்ளது. மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஹோட்டல்கள், மருந்தகங்கள் ஆகியவை இயங்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடை உத்தரவு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் வெளியூரிலிருந்து சென்னையில் தங்கி வேலை செய்வோர், 144 உத்தரவால் கிடைத்துள்ள விடுமுறையைச் சொந்த ஊருக்கு சென்று கழிக்க முடிவு செய்துள்ளதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இன்று மதியம் முதலே கூட்டம் அலைமோதுகிறது.


ஆனால், முன்னெச்சரிக்கையாக குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதியில் உள்ளனர். ஒரே சமயத்தில் கூட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளதால், திரும்பும் பக்கமெல்லாம் கூட்டமாக உள்ளது. ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுவிட்டதால், பேருந்து சேவையை நம்பி மக்கள் குவிந்துவருகிறார்கள். ஆனால், ஊருக்கு செல்ல முடியாத அளவுக்குக் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் சாலையில் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 
இந்நிலையில் கோயம்பேட்டிலிருந்து செல்லும் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளதற்கு திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், “கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு. பேருந்துகளைக் குறைத்தால் எப்படி ஊருக்குச் செல்வார்கள் என்கிற எண்ணம் கூடவா இல்லை? உடனே பேருந்துகளை அதிகரித்து, மக்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும்.” என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.