சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானூஷ் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், ஃபேஸ்புக்கில் லைவ் அடித்தபடி காஷ்மீர் விவகாரம் குறித்து இப்போது  பாஜகவினரிடம் கேட்கலாம் என்றபடி உள்ளே நுழைந்தார். அப்போது பாஜக தொண்டர்களுக்கும் பியூஷ் மானூஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது, பொறுமையிழந்த பாஜக தொண்டர்கள் பியூஷ் மானுஷுக்கு செருப்பு மாலை அணிவித்து வெறுப்பேற்றினர். 
மேலும் பியூஷ் மானுஷ் செருப்பு மாலையுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே போக வெறுப்படைந்த பாஜக தொண்டர்கள் ஒன்று கூடி அவர் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். காவல் துறையினர் இருந்தபோதே அத்துமீறி பாஜக தொண்டர்கள் பியூஷ் மானூஷ் மீது தாக்குதல் நடத்தினர். பிறகு போராடி பாஜக தொண்டர்களின்  தாக்குதலிலிருந்து பியூஷ் மானூஷை போலீஸார் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலம் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.
இந்நிலையில் பியூஷ் மானூஷ் மீது நடந்த தாக்குதலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில், “பாஜக அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன்வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர், சேலம் பாஜக அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கவுரி லங்கேஷ் போன்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம் தமிழக கருத்துரிமையாளர்களுக்கும் நேரக்கூடும் என்பதற்கான அபாய எச்சரிக்கையாகவே பியூஷ் மானூஷ் மீதான தாக்குதலைப் பார்க்க வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் கழுத்தை அறுக்கும் இத்தகைய வன்செயல்களை அறவழியில் வேரறுப்போம்!” என்று தெரிவித்துள்ளார்.