Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம்.. புள்ளிவிவரங்களை கொட்டி பதறும் மு.க. ஸ்டாலின்..!

மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஆட்சியை முதல்வர் பழனிசாமி நடத்தி வருவது, ஆதாரபூர்வமாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று திமுக  தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

M.K.Stalin attacked Edappadi Palanisamy government on law and order issue
Author
Chennai, First Published Sep 6, 2020, 1:09 PM IST

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது அமைதியைக் காப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் தமிழகம் திறம்படச் செயல்பட்டுள்ளது” என்ற முதல்வர் பழனிசாமியின் பேச்சை, 'பச்சைப் பொய்' எனத் தற்போது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை நிரூபித்துள்ளது. ‘கூவத்தூர்’ கொண்டாட்டம் மூலம் முதல்வராகப் பொறுப்பேற்ற பழனிசாமியின் முதல் இரண்டு ஆண்டுகளான – 2017, 2018-ம் ஆண்டுகளுக்குரிய ஆவணக் காப்பகத்தின் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அதிமுக அரசு எப்படி படுதோல்வியடைந்து பரிதாபமாக நிற்கிறது என்பது விளங்கும்.M.K.Stalin attacked Edappadi Palanisamy government on law and order issue
இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் உள்ளூர், சிறப்புச் சட்டங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின் அந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முறையே 4.20 லட்சம், 4.99 லட்சம் என்று உயர்ந்து விட்டன. குற்றச் செயல்களும் 18.61 சதவீதம் அதிகரித்து விட்டன. கொலைக் குற்றங்களில் சென்னையில் 11.69 சதவீதம், கோவையில் 47.62 சதவீதமாகவும் அதிகரித்து; மாநகரம் இரண்டிலும் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற ஆபத்தான சூழலை அதிமுக ஆட்சி உருவாக்கியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில்; கோவையில் 40.79 சதவீதமாகவும், சென்னையில் 18.54 சதவீதமாகவும் அதிகரித்து; பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநகரங்களாகச் சென்னையையும், கோயம்புத்தூரையும் மாற்றிக் காட்டியதுதான் முதல்வர் பழனிசாமி ஆட்சியின் சாதனை(!).
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முடியாமல், அதிமுக ஆட்சி தடுமாறுகிறது என்பதைப் பகிரங்கப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 17.74 சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் மட்டும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 211.24 சதவீதம் அதிகரித்துள்ளது என்றால்; பெண்களும், குழந்தைகளும் பழனிசாமியின் ஆட்சியில் முற்றிலும் பாதுகாப்பின்றி ஆபத்தின் வளையத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது புலனாகியுள்ளது.

M.K.Stalin attacked Edappadi Palanisamy government on law and order issue
மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் 2018-ல் மட்டும் 3162 குற்றங்கள் நிகழ்ந்து; மூத்த குடிமக்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது மாநிலமாகி விட்டது. அனைத்திற்கும் மேலாக, போலீஸ் பாதுகாப்பின்போது (கஸ்டடியில்) நிகழும் மரணங்களில், இந்தியாவிலேயே குஜராத்திற்கு அடுத்தபடியாக, தமிழகம் இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் சம்பந்தமில்லாத ஓர் ஆட்சியை முதல்வர் பழனிசாமி நடத்தி வருவது, ஆதாரபூர்வமாக தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
தனது துறையின் சார்பில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள கொலை வழக்குகளின் எண்ணிக்கையிலும் புகுந்து குளறுபடி செய்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி. ஓர் உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், அரசின் சார்பில் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திற்கு - 2018-ல் நிகழ்ந்ததாகக் கொடுத்த கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை 1569; ஆனால், முதல்வர் தானே சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 1488.

M.K.Stalin attacked Edappadi Palanisamy government on law and order issue
இப்போது தமிழகத்தில் கொரோனா மரணங்களை மறைத்துப் பொய்த் தகவல்களைக் கொடுப்பதைப் போல், அப்போதே 81 கொலைகளை மறைத்துள்ளார். ஆகவே 'கணக்கை மறைப்பது', தனக்கு அவப்பெயர் ஏற்படும் என்று அறிந்து எண்ணிக்கையைக் குறைப்பது, முதல்வர் பழனிசாமிக்குக் கை வந்த கலையாகி, முதல்வர் பதவிக்குரிய கண்ணியத்தையும் குறைத்துவிட்டார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்குக் காரணமாகி, மிகச்சிறந்த தமிழகக் காவல்துறையை தங்களுடைய ஆதாயத்திற்காக அரசியல் மயமாக்கி, அதை அதிமுக சொன்னபடி ஆடும் ‘கைப்பாவை’யாக மாற்றி, இன்றைக்கு மக்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கும் முதல்வர் பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பற்ற ஆபத்தான ஆட்சியாக இருக்கும் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, மாநிலத்தின் பொருளாதார - தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி; அமைதிக்கும், மக்களின் பாதுகாப்பிற்குமே மிகப்பெரிய சாபக்கேடு மட்டுமல்ல; தமிழ்நாட்டில் 'ரவுடிகள் ராஜ்யத்திற்கு' மாநில அளவிலான 'பெர்மிட்' வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி என்று, ஆதாரங்களின் அடிப்படையில், பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்” என அறிக்கையில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios