அதிமுக அரசு என்பது நூலில் ஆடும் பொம்மை. பல வகை பொம்மைகளைப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் ஒரே நூலில் கட்டி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி எஜமானர்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் குறித்து திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடல்:
தமிழக அரசின் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, கூட்டத்தொடரை நிறைவு செய்திருக்கிறது சட்டப்பேரவை.  அதிமுக அரசின் அரசியல் என்பது முற்றிலும் வேறுவிதமானது; அண்ணாவுக்கும், திராவிட இயக்கத்திற்கும் தொடர்பில்லாதது; சந்தர்ப்பவாதத்தில் தோய்ந்தது. அதுவும், அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்குப் பிறகு, அதிமுக அரசு என்பது நூலில் ஆடும் பொம்மை. பல வகை பொம்மைகளைப் பார்க்கிறோம். எல்லாவற்றையும் ஒரே நூலில் கட்டி ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்லி எஜமானர்கள். அந்த எஜமானர்களிடமிருந்து, மாநிலத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் பெறுவதற்கான வேட்கையோ வலிமையோ இந்த அடிமை அரசாங்கத்திற்கு இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை என்பதை, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் அம்பலமாக்கிவிட்டன.


பொதுமக்கள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை, எடப்பாடி பழனிச்சாமி அரசின் பட்ஜெட் மீதான தங்களின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதைத் தொடர்ச்சியாகக் காண முடிந்தது. எந்தத் துறையினருக்கும் எவ்விதப் பயனுமற்ற பட்ஜெட் இது என்பதை எவரும் மறுக்க முடியாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆதரித்த காரணத்தால், அது நிறைவேற்றப்பட்டு, நாடு முழுவதும் பதற்றம் பரவிப் போராட்டம் நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பிராயச்சித்தமாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான சிறப்புத் தீர்மானம் ஒன்றை இந்தப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். அத்துடன், வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மாறாக, பெற்றோரின் பிறந்த தேதி, பிறந்த ஊர் உள்ளிட்ட தேவையில்லாத பல விவரங்களைக் கேட்கும் என்.பி.ஆர் கணக்கெடுப்பைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து பிராயச்சித்தம் தேடுங்கள் என வலியுறுத்தினேன். ஆளும் தரப்பில் முதலமைச்சர் உள்பட யாரும் பதில் சொல்லவில்லை. சபாநாயகரும் அது குறித்து விவாதிக்க அனுமதிக்கவில்லை என்பதால், அடையாள வெளிநடப்பு செய்தது திமுக.
 தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைக் கேள்விக்குறியாக்கும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் குறித்து வலுவான ஆதாரங்களுடனும், புள்ளிவிவரங்களுடனும் திமுக உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் எடுத்துரைத்தார். இதுதொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கின்ற காரணத்தால், விவாதிப்பதற்கு அனுமதி இல்லை என மறுத்தார்கள்.
5 நாட்கள் நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட - மேற்கொள்ளப்பட்ட அனைத்துமே மக்கள் மீது அக்கறையற்ற - மாநில அதிகாரங்களை அடமானம் வைக்கிற செயல்பாடுகள்தான். மத்திய அரசின் தயவில், பா.ஜ.கவின் கண்ணசைவில், ஆட்சி நடக்கின்ற காரணத்தால், மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமியும் அவரது சகாக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நலனில் அக்கறையற்ற அதிமுக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தாய்மொழி நாளையொட்டி முதல்வர் விடுத்த அறிக்கையில், ‘விழிபோல எண்ணி நம் மொழிகாக்க வேண்டும்’ என எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படப் பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதே எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில்தான், ‘ஏமாற்றாதே.. ஏமாற்றாதே.. ஏமாறாதே.. ஏமாறாதே.. ” என்ற பாடல் வரியும், “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்’ என்ற பாடல்வரிகளும் உள்ளன. மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் இந்த அரசு, அதே மக்கள் முன் பதில் சொல்ல வேண்டிய காலம் நெருங்கி வருகிறது! மக்கள்தான் மகேசர்கள்; எதையும் மறந்து விடவும் மாட்டார்கள்; ஏமாற்றுவோரை, நிச்சயம் மாற்றுவார்கள்; வெளியேற்றுவார்கள்.” என மு.க. ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.