நீங்கள் பா.ஜ.க ஆட்சிக்கு பணிந்து, அஞ்சி, காலில் விழுந்து கிடப்பது ஏன் என்று அதிமுக அரசை  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 11 எல்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பற்றியும் என்பிஆர் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மு.க. ஸ்டாலின் பேசினார்.

 
“11 எல்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் முடிவை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. இதைப் பற்றி பேரவையில் கேள்வி எழுப்பினேன். வார இதழ் ஒன்றின் தலையங்கத்தில் ‘ஒரு தீர்ப்பு பல கேள்விகள்’ என்கிற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ஆளுநரைச் சந்தித்து மனு அளித்ததற்கே 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். ஆனால், ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.


உச்ச நீதிமன்றத்துக்கு எழுப்பியுள்ள கேள்வியில், ‘குறிப்பிட்ட கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அக்கட்சிக்கு எதிராகத் திரும்பும் ஒரே பிரச்னையில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் ஏன் எனவும்  கேட்கப்பட்டுள்ளது. முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்ததற்காக 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். ஆனால், ஆட்சியே இருக்கக் கூடாது என வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.


பல்வேறு மாநிலங்களில் சிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவையிலும்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோருகிறோம். என்.பி.ஆர்.  என்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தமிழகத்தில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். அதற்கு முதல்வர் பதில் அளிக்கவில்லை. வருவாய்த்துறை அமைச்சர் பதில் சொல்கிறார். நாங்கள் வாக்கு வங்கிக்காக பேசுவதாக சொல்கிறீர்கள். நீங்கள் பா.ஜ.க ஆட்சிக்கு பணிந்து, அஞ்சி, காலில் விழுந்து நடப்பது ஏன்? எங்கே ஆட்சி போய் விடுமோ என்ற பயத்தில்தான் உள்ளார்களே தவிர மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலை இல்லை” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.