காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் காணொலி காட்சி வாயிலாக மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், “இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சியை நடத்தும் கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் கொடியில் அண்ணா படம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால், அறவே இல்லை என்பதுதான் உண்மை. சில நாட்களுக்கு முன்னால் செய்தியாளர்களைச் சந்தித்த முந்திரிக்கொட்டை அமைச்சர் ஜெயகுமார், அண்ணாவையே விமர்சித்து பேட்டி கொடுத்தார். “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்று கேட்டார் பேரறிஞர் அண்ணா. இது எங்களுடைய கொள்கை அல்ல; அது அண்ணாவோடு முடிந்துவிட்டது” என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார்.


அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக் கொண்டு, அண்ணா படத்தை கொடியில் போட்டுக் கொண்டு நடக்கும் ஒரு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சொல்லி இருக்கிறார், அது அண்ணாவோடு முடிந்துவிட்டது என்கிறார். இதைவிட அண்ணாவுக்கு துரோகம் என்ன இருக்க முடியும்? பத்து நாள் ஆகிவிட்டது. இதற்கு அ.தி.மு.க சார்பில் ஏதாவது விளக்கம், மறுப்பு வருமா என்று பார்த்தேன். வரவில்லை! அண்ணா பெயரை கட்சியின் பெயரில் இருந்து நீக்கிவிட்டு, கொடியில் இருந்து படத்தை நீக்கிவிட்டு, அண்ணா காலத்தோடு முடிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொல்லட்டும். அது பற்றி நான் கவலைப்படவில்லை. அண்ணாவின் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு பாஜகவின் பாதம் தாங்கிகளாக எதற்காக குப்புற விழுந்து கிடக்க வேண்டும்?


கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி கொடுங்கள் என்று சொன்னேன். அதைக்கூடச் செய்யவில்லை. அதற்கு கூட அவருக்கு மனமில்லை! ஆனால் கொரோனா தடுப்பூசி வந்தால் அதனை இலவசமாக போடுவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு வெட்கமாக இல்லையா? மக்கள் கொரோனா பீதியில் இருக்கும் போது இலவச தடுப்பூசி போடுவேன் என்பது மக்கள் பயத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் கொடூரம் அல்லவா? 


இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கப்படவில்லை. எப்போது கண்டுபிடிக்கப்படும்? தெரியாது! எப்போது சோதனை செய்யப்படும்? தெரியாது! எப்போது உற்பத்தி செய்யப்படும்? தெரியாது! இத்தனை கோடிப் பேருக்கான தயாரிப்பு எப்போது முடியும்? தெரியாது! ஒரு தடுப்பூசி விலை என்ன? தெரியாது! இதனை மத்திய அரசு போடப்போகிறதா? தெரியாது! மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப் போகிறார்களா? தெரியாது! ஆனால் ஊசி இலவசம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.
மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையைக் கூட விலை பேசுகிறார் பழனிசாமி. முதலமைச்சர் பதவியை விலை கொடுத்து வாங்கியவர் அப்படித்தான் பேசுவார். ''பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறார். அவருக்கும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது. லட்சம், கோடி என்று சொல்வாரே தவிர, சில நூறு ஆயிரங்கள் கூட சாமானியர் குடும்பத்துக்கு இதுவரை வந்து சேர்ந்ததாக தகவல் இல்லை. இப்படி மக்களுக்காக எதுவும் செய்ய மனமில்லாதவர்கள்தான், கொரோனா தடுப்பூசி இலவசம் என்பது போன்ற கொடூரமான வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள்.


கொரோனாவை விடக் கொடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோட்டையில் இருக்கும் கொள்ளையர் கூட்டத்தை விரட்டியாக வேண்டும். பத்தாண்டு கால பாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை மீட்டாக வேண்டும்.  அண்ணாவின் ஆட்சியை அமைத்தாக வேண்டும்! கலைஞரின் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும்! ‘பொல்லாத ஆட்சியை ஒழித்து பொற்கால ஆட்சியை அமைப்போம்” என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.