தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுகவில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் மு.க. அழகிரி, கலைஞர் திமுக என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக மு.க. அழகிரி மதுரையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். “2021 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பதா அல்லது புதிய கட்சி தொடங்குவதா என்பது குறித்து எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து பிறகே அது குறித்த முடிவை தெரிவிப்பேன்.


தற்போது கொரோனா தொற்று காரணமாக என்னுடைய ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லை. என்னுடைய ஆதரவாளர்கள் என்னிடம்தான் உள்ளனர். அவர்கள் அனைவரும் நன்றாக உள்ளனர். தற்போது திமுகவில் புகைச்சல் அதிகமாகிவிட்டது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திமுகவின் நிலையை நீங்களே அறிந்துகொள்வீர்கள். அதை தற்போதே என்னால் கூற முடியாது. நான் ஜோதிடன் கிடையாது. தற்போது திமுகவில் உள்ள சிலர் பதவிக்காகவே இருக்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகு அந்த நிலைமையை நீங்களே பார்க்கப் போகிறீர்கள். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது.” என்று மு.க. அழகிரி தெரிவித்தார்.