கருணாநிதியின் மறைவுக்குப் பின் உட்கட்சிக்குள் களேபர சுனாமியை கிளப்புவது போல் உறுமிய அழகிரி அநியாயத்துக்கு அமைதியாகிவிட்டார். அண்ணனின் அமைதிக்குப் பின் என்ன காரணம் இருக்கிறது? என்று ஸ்டாலின் சந்தேகப்பட்டு, ஸ்பைகளை உசுப்பிவிட்டிருக்கிறார். இந்நிலையில் மு.க.தமிழரசு, செல்வி உள்ளிட்டோரும் தி.மு.க.வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தலை நீட்ட துவங்கியுள்ளதால், ‘என்னடா நடக்குது தி.மு.க.வுல?’ என்று பார்வையை கூராக்கியுள்ளது அரசியல் விமர்சகர் வட்டாரம்.  

இரண்டு தொகுதி இடைத்தேர்தலுக்குள் தன்னை கட்சிக்குள் இணைக்க வேண்டும்! இல்லையென்றால் பெரும் பிரளயத்தை உருவாக்குவேன்! என்று சபதம் போட்டார் அழகிரி. அவரது வாரிசுகளும் ‘அப்பாவை சித்தப்பா சேர்த்துக்கலேன்னா...’ என்று விழிகள் உருட்டினர். இந்நிலையில் ’இடை தேர்தலை இப்போ நடத்துனா, மழையில் நனைஞ்சுடும்’ என்கிற ரேஞ்சுக்கு கவலை காட்டி, தள்ளி வைத்துவிட்டது தேர்தல் கமிஷன். 

ஆனால் அதேவேளையில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் உறுதியாக்கப்பட்டதோடு அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவும் உத்தரவிடடப்பட்டுள்ளது.. ஆக இருபது தொகுதிகளில் இடைத்தேர்தல் உறுதியாகியுள்ளது. இதற்கு தாறுமாறாக தயாராகவேண்டிய சூழ்நிலை தி.மு.க.வுக்கு உள்ளது. இந்நிலையில் சைலண்டாக இருக்கிறார் அழகிரி. ரெண்டு தொகுதிக்கே ஓவராய் குதித்தவர் இருபது தொகுதிக்கு ஓஹோன்னு குதிக்கணுமே! ஆனால் அவர் இன்று வரை சீனுக்குள் சிக்காமல் இருப்பது ஸ்டாலினை டவுட் பட வைத்துள்ளது. அண்ணன் எங்கே இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? அவருடன் தொடர்பில் இருக்கும் தி.மு.க.வினர் மற்றும் வேறு கட்சியினர் யார் யார்? அ.தி.மு.க.வோ அல்லது பி.ஜே.பி.யோ அவரை நெருங்கி ஆலோசிக்கிறதா?’என்றெல்லாம் அறிந்து சொல்லிட ஸ்பை டீமை நியமித்து சுற்ற விட்டிருக்கிறார் ஸ்டாலின். அதேவேளையில் ஸ்டாலினின் ரியல் உடன் பிறப்புகளான செல்வி மற்றும் மு.க. தமிழரசு இருவரும் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளிடம் அடிக்கடி அரசியல் நிலை குறித்து விவாதிக்க துவங்கியுள்ளனராம். 

கோபாலபுரம் இல்லத்துக்கு ஸ்டாலின் அடிக்கடி வர துவங்கியுள்ளதன் பின்னணி கூட இதுதான் என்கிறார்கள். தயாளு அம்மாளை மரியாதை நிமித்தமாக பார்க்க வரும் கழக முக்கியஸ்தர்களிடம் செல்வி, அரசியல் பேச்சுக்களை யதார்த்தமாக கொண்டு வருகிறாராம். பின் அவர்களிடம் மு.க. தமிழரசு நேரிலோ, போனிலோ சில தகவல்களை கறக்கிறார் என்றும் ஸ்டாலினுக்கு தகவல் போயிருக்கிறது.

இவர்களின் இந்த புது அணுகுமுறை ஸ்டாலினை சற்றே உஷ்ணமாக்கியுள்ளது. ஆக நாலா புறமிருந்தும் இல்லாமல் நாற்பத்தெட்டு புறமிருந்தும் நெருக்கடி அலை போல் புகை கிளம்புவதால் அநியாயத்துக்கு அலர்ட் ஆகியுள்ளார் தலைவர் ஸ்டாலின்.