திமுக கூட்டணியிலிருந்து விலகி வந்தால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயாரக இருப்பதாக அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான சினேகன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய பிறகு டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்துபேசினார். இதனால், காங்கிரஸ் கூட்டணியில் கமல் இணைவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கமல்ஹாசனை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால், திமுக தரப்பிலிருந்து பாசிட்டிவான முன்னேற்றம் ஏற்படாததால், அந்த முயற்சி முடிந்துபோனது. திமுகவை ஊழல் கட்சி என்று கமல்ஹாசன் விமர்சித்தார். கமலுக்கு திமுகவும் பதிலடி கொடுத்தது.

இதனையடுத்து தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் தனித்து போட்டியிட கமல் முடிவுசெய்திருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க கமல் விருப்பமாக இருப்பதை அந்தக் கட்சியைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினரும் கவிஞருமான சினேகன் வெளிப்படுத்தியிருக்கிறார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து சினேகன் பேசும்போது, “நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸோடு கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட நினைத்தது. ஆனால், மக்கள் நீதி மய்யம் நினைத்தது நடக்கவில்லை. எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை.  ஒரு வேளை தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேறி வந்தால், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது. இந்தத் தேர்தலில் ஊழல் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம். பா.ஜ.க.வோடு காங்கிரஸை ஒப்பிட்டால், காங்கிரஸ் ஊழல் கட்சி கிடையாது.” என்று தெரிவித்தார்.