விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்து பேசுவதால் தமக்கு யாரும் அழுத்தம் தர முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பாக அமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் சார்பில் 3-வது நாளாக மதுரை அரசினர் சுற்றுலா மாளிகையில் இன்று நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜராகி தனது கருத்தைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று தொடுத்த மனு மீது சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை தீர்ப்பாயத்தில் என்னையும் ஒரு தரப்பாக விசாரணைக்கு அழைத்து உத்தரவிட்டு இருந்தனர். மத்திய அரசு தரப்பில் இருந்து வரவேண்டிய சாட்சியங்களில் சில ஆவணங்கள் இன்று வரவில்லை என்பதால் இன்று விசாரணை நடைபெறவில்லை. எனவே வருகிற 30-ம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பாக டெல்லியில் என்னுடைய வாதங்களை எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறேன். எந்த ஆதாரமும், எந்த சாட்சியும் இல்லாமல் தமிழகத்தை சேர்த்துதான் தமிழீழம் அமைக்கப் போவதாகக் கூறுகிறார்கள். காவல்துறையினரால் தயாரிக்கப்பட்ட பல பொய்யான ஆவணங்கள் இந்த தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதால் யாரும் எனக்கு அழுத்தம் தர முடியாது. மேலும் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது எந்தவொரு குற்றமாகாது என்று உச்சநீதிமன்றமே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். அதன் அடிப்படையில்தான் நான் எனது வாதங்களை முன்வைத்துவருகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.