சென்னையில் வீட்டின் முதல் தளத்தில் தனியாக இருந்த சிறுமியின் வாயில் பிளாஸ்த்ரி ஒட்டி, கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் வீட்டின் முதல் தளத்தில் தனியாக இருந்த சிறுமியின் வாயில் பிளாஸ்த்ரி ஒட்டி, கட்டிப்போட்டு பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். சென்னை கொளத்தூர் செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (54). காய்கறி மார்க்கெட் வைத்து நடத்தி வரும் இவர் தனது மனைவி அமுதா(51), இரு மகள்கள் மற்றும் மகனுடன் இரண்டு தளம்கொண்ட மாடிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி மாலை கிருஷ்ணன் தனது மகனுடன் கடை வேலையில் ஈடுபட்டிருந்துள்ளார். 

மேலும் அவரது மனைவி அமுதாவும், மூத்த மகளும் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டின் இரண்டாம் தளத்தில் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது காரில் வீட்டுக்குள் நுழைந்த 7 பேர் கொண்ட கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்று முதல் தளத்திலிருந்த கிருஷ்ணனின் இளைய மகளை கத்தியைக் காட்டி மிரட்டி வாயில் பிளாஸ்த்ரி ஒட்டி, கைகளை கட்டிபோட்டு பீரோ சாவியை எடுத்து அதிலிருந்த பணத்தை சாக்குப்பையில் கட்டி எடுத்துக்கொண்டு காரில் தப்ப முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக காரின் கதவு திறக்காமல் போனதாலும், அங்கு வந்த கிருஷணனின் மகன் அவர்களை கண்டு துரத்தியதாலும் அந்த கும்பல் கொள்ளையடித்த பணத்தை மூட்டையாக அங்கேயே போட்டுவிட்டு காரில் அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவா, மைக்கல் மற்றும் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த குமார் ஆகியோரின் திட்டப்படி மதன், விஜய், விஜயகுமார், சுனில், நரேஷ், வினோத் மற்றும் கமலக்கண்ணன் ஆகிய 7 பேர் கொண்ட கும்பல் வியாபாரியன கிருஷ்ணன் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதும் அதற்காக பல்லாவரத்திலுள்ள டிராவல்ஸ் ஒன்றிலிருந்து காரை வாடகைக்கு எடுத்து அதன் வாகன எண்ணை மாற்றி ஒட்டிவிட்டு வியாபாரி கிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்று கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது. 

கொள்ளையடித்துவிட்டு தப்ப முயலும்போதுதான் கிருஷ்ணனின் மகன் அவர்களை துரத்தி கார் கண்ணாடியை கல்லால் அடித்து உடைக்கவே அவர்கள் சாக்குப்பையை பணத்துடன் அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. அவர்கள் விட்டுச் சென்ற சாக்குப்பைக்குள் அவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் 2 கத்திகள் இருந்ததை ஏற்கனவே காவல் துறையினர் மீட்டிருந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட மதன், விஜய், விஜயகுமார், சுனில் மற்றும் காரை வாடகைக்கு எடுத்த கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதுடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய மீதமுள்ள 5 நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.