சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக் குமார், கடந்த 2 தினங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், மிகவும் கீழ்த்தரமாக பேசியதாகவும் அதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அசோக்குமாரின் தற்கொலை, திரைத்துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன், கௌதம் மேனன், நடிகர் விஷால் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். அன்புச்செழியன் மீது சசிகுமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அசோக்குமாரின் தற்கொலையை அடுத்து அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார். திரைத்துறையினர் பலர் அன்புச்செழியனுக்கு எதிராக இருந்தாலும், எதிர்ப்புக்கு நிகராக ஆதரவும் இருக்கிறது.

இயக்குநர்கள் சீனு ராமசாமி, வெற்றிமாறன், சுந்தர்.சி, நடிகை தேவயாணி, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி ஆகியோர் அன்புச்செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள அன்புச்செழியனை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில், அன்புச்செழியன் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.