துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓபி ரவீந்திரநாத் மீது லோக்பாலில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரவீந்திரநாத் எம்பி ஆவதற்கு முன்னதாக அவர்கள் குடும்பம் சார்பில் துவங்கப்பட்ட விஜயந்தா டெவலப்பர்ஸ் எனும் நிறுவனம் தற்போது அவருக்கு புதிய தலைவலியாக உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓபிஎஸ்சின் இளைய மகனை குறி வைத்து புகார் ஒன்று வெளியானது. அந்த புகாருக்கும் அடிப்படை காரணமாக விஜயந்தா டெவலப்பர்ஸ் இருந்தது. மு.க.ஸ்டாலின் அறிக்கை விட அதற்கு ஓபிஎஸ இளைய மகன் ஜெயபிரதீப் பதில் அளிக்க என தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.

பின்னர் கொரோனா தீவிரமான நிலையில் அந்த விவகாரம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள லோக்பாலில் தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வெறும் 1 லட்சத்து 36ஆயிரம் ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட விஜயந்தா டெவலப்பர்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை மேற்கொண்டு வருவதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜயந்தா டெவலப்பர்ஸ் நிறுவன பெயரில் ஏராளமான நிலங்கள், பங்களாக்கம், சொகுசு கார்கள் என அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. வெறும் ஒரு லட்சத்து 36ஆயிரம் ரூபாய் முதலீட்டில் துவங்கப்பட்ட நிறுவனம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற அந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் தேனி எம்பி ரவீந்திரநாத் பங்கு இருக்கிறதா என விசாரிக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

மேலும் விஜயந்தா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்ட ரேஞ்ச் ரோவர் காரை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தி வரும் நிலையில் அவர் மூலமாக நிறுவனத்திற்கு ஏதேனும் சாதகமான அம்சங்களை பெற்றார்களா என்கிற சந்தேகம் எழுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விஜயந்தா நிறுவனம் தங்கள்  ரியல் எஸ்டேட் டீல்களுக்கு அனுமதி பெற்றதா என்றும் விசாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விஜயந்தா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஓ.பி. ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதி எம்பி என்பதால் லோக்பால் அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாரை லோக்பால் தலைவர் பினாக்கி சந்திரகோஸ் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகிறார்கள். இதனிடையே தமிழக அளவில் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரத்தை லோக்பால் வரை கொண்டு சென்றதில் திமுக பின்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள். ஏனென்றால் இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாக திமுகவே காரணம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு டெண்டர் விவகாரங்களை எடுத்து திமுக தலைமை குடைச்சல் கொடுத்து வருகிறது. அந்த வகையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில் விஜயந்தா டெவலப்பர்ஸ் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல், விரைவில் மத்திய அமைச்சரவை மாற்றப்பட உள்ள நிலையில் வழக்கம்போல் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை பெற ஓபிஎஸ் முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் இந்த விவகாரத்தை திமுக தரப்பு பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.