திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி.க்கு 2018ஆம் ஆண்டுக்கான ராஜ்யசபாவின் சிறந்த பெண் எம்.பி.க்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 13ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார்.

பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் செய்தி நிறுவனம் 2017ஆம் ஆண்டிலிருந்து சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எட்டு வகைகளில் விருதுகள் வழங்கி வருகிறது. 

இது தொடர்பாக லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜய் தர்தா, கனிமொழி எம்.பி.க்கு எழுதிய கடிதத்தில், “லோக்மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாநிலங்களவையின் 2018ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடாளுமன்றத்தில் தாங்கள் கடந்த பத்தாண்டுகளாக மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும், இந்த விருது தங்களுக்கு வழங்கப்படுகிறது. உங்களது நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக உந்துசக்தியாகவும் திகழ்ந்து, ஜனநாயகத்துக்கான நேர்மறையான பங்களிப்புகளை முன்னெடுத்துச் செல்கின்றன. தங்களுக்கு விருது அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு அமைந்ததற்கு லோக் மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விருதுகளைப் பத்து பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியைத் தலைவராகக் கொண்ட விருதுகள் தெரிவுக் குழுவில், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, பேராசிரியர் சகுதா ராய், பிரஃபுல் பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோம்மட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற வாதிகள் இடம்பெற்றுள்ளனர்.

முதன்முறையாக ராஜ்ய சபா எம்.பி.யாக திமுகவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி, 2013ஆம் ஆண்டு மீண்டும் ராஜ்ய சபாவுக்குத் தேர்வானார். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவர் ராஜ்யசபா எம்.பி.யாக  இருக்கும் நிலையில் அவருக்கு விருது கொடுத்து கவுரவித்திருப்பதால் திமுகவினர் மட்டுமல்லாமல் மாற்று கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.