கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இந்நிலையில் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. வடமாநிலங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நிலையில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மொத்த பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கள்தொகையை பட்டினிக்கு தள்ளும் அளவுக்கு அவை திறன் பெற்றவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு அரேபியாவை கடந்து, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் தற்போது ராஜஸ்தான்  மேற்கு மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோட உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திலும் வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கியுள்ளன, இந்த முறை அந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருப்பதாக அஞ்சபட்ட நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கம் செடிகளில் ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி உள்ளன,  இவை வட மாநிலத்தில் உள்ளது போல பல நிறங்களில் இருப்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கிருஷ்ணகிரியில் சில பகுதிகளில் வெட்டுக்கிளிகள் காணப்படுவது குறித்து இன்று மாலை 3 மணிக்கு வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

கிருஷ்ணகிரியில் எருக்கன் வாழைகளில் வெட்டுக்கிளிகள் அதிக அளவில் காணப்படுவது பற்றி வேளாண் துறை அதிகாரிகள் அங்கு நேரில் ஆய்வு செய்துள்ளனர். அங்கு காணப்படும் வெட்டுக்கிளிகள் லோகஸ்ட் அல்ல லோக்கல் தான் என வேளாண் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது தமிழகத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல,  ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வந்த பாலைவன வெட்டுக்கிளிகள்தான் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்,  ஆனால் கிருஷ்ணகிரியில் காணப்படுவது அந்த வகை வெட்டுக்கிளிகள் அல்ல, எனவே ஆபத்திற்கு வாய்ப்பில்லை எனவும்,  இது குறித்து அஞ்சத் தேவையில்லை எனவும் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். ஆனாலும் இந்த வெட்டுக்கிளிகள் குறித்தும் இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்தும்  ஆலோசனை நடைபெற உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.