சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக காவல்துறையினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும்.

சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

லாக்அப் டெத்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி மலர். இவர்களுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தங்கமணி சாராய வியாபாரம் செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சாராயம் விற்பதாக கூறி தங்கமணியை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

உறவினர்கள் குற்றச்சாட்டு

இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். ஏப்ரல் 27ம் தேதி காலை காவல்துறையினரிடம் இருந்து தங்கமணியின் உறவினர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. தங்கமணிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி உயிரிழந்துவிட்டதாகவும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் பொய் வழக்குப் பதிவு செய்து தங்கமணியை போலீசார் சிறையில் அடைத்ததாகவும் போலீசார் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவத்திற்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டிடிவி.தினகரன் கண்டனம்

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் காவல்நிலையத்தில் உயிரிழந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக காவல்துறையினர் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவேண்டும்.

'காவல்துறை உங்கள் நண்பன்' என்று வெறுமனே எழுதிவைத்தால் மட்டும் போதாது. சட்டத்தை அவர்களே கையில் எடுத்துக்கொண்டு செயல்படாமல் உரிய விதிமுறைகளை பின்பற்றியே விசாரணைகள் நடத்தப்படவேண்டும். இனி, இத்தகைய நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெறக்கூடாது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.