தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 பேர் குணமடைந்து உள்ளனர். 52 ஆயிரத்து 726 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6 ஆயிரத்து 045 பேர் உயிரிழந்துள்ளனர். 

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஏழாம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மத்திய அரசு செப்டம்பர் 30ம் தேதி வரை 4ம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.     

லாக்டவுனில் நடைமுறைகள் அமலில் இருக்கும் போது கூட்டம் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்கு கூட அளவான நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி  திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லட்சுமணன்  ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழுப்புரம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 2,094 பேர் பங்கேற்றனர். 

 

இதையும் படிங்க: இன்று சிவகார்த்திகேயன் வீட்டில் விசேஷமான நாளாம்... நீங்கள் பார்த்திடாத புகைப்படங்களுடன் அசத்தல் தகவல்கள் !

இந்நிலையில் ஊரடங்கு விதிமுறையை கடைபிடிக்காமல் 144 உத்தரவை மீறியதாக பொன்முடி, முன்னாள் எம்.பி. லட்சுமணன் உள்ளிட்ட 317 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.