ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முடி திருத்தி, ஷேவ் செய்து, டை அடித்து, நகம் வெட்டி அன்பாக அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மதியம் 1 மணி வரை மட்டுமே வெளியே வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகிறார்கள்.

மேலும், முடி திருத்தும் கடைகள் எதுவுமே திறக்கவில்லை. இதனால் வீடுகளில் ஒருவருக்கு ஒருவர் முடி திருத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது டுவிட்டர் பக்கத்தில், கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில் என்ற தலைப்புடன்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் நடித்த வானத்தைப் போல திரைப்படத்தில் இடம்பெற்ற எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல் ஒலிக்க, அவரது மனைவி பிரேமலதா, விஜயகாந்துக்கு ஷேவ் செய்து விட்டு, தலைமுடிக்கு டை அடித்து, கை, கால் நகங்களை பாசத்துடன் வெட்டி விடுகிறார். அப்போது அவர் கால்களில் இருக்கும் தழும்புகளைப் பார்த்து என் கணவர் சண்டைக் காட்சிகளின் போது அடிபட்ட வீரத்தழும்புகள் தான் இவை என்றும் நினைவு கூறுகிறார். வீடியோவின் இறுதியில் விஜயகாந்த் தன் தலைமுடியை சீவி  சிரித்துக் கொண்டே ரசித்துள்ளார். இந்த வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.