எப்போதும் தேவையில்லாமல் பேசி உளறிக் கொட்டி பரபரப்புக்கு ஆளாகும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இப்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க முயற்சி செய்திருக்கிறார். 

ஜெயலலிதா இருந்தவரை வாயே திறக்காத அமைச்சர்கள், இப்போது அமைதியாக இருந்தால்தான் ஆச்சர்யம்... ஆளுக்கொரு பேச்சு, நாளுக்கொரு கருத்து என அதிர்ச்சியூட்டி வருகிறார்கள். அதில் முக்கியமான முன்னவர் திண்டுக்கல் சீனிவாசன். பின்னவர் செல்லூர் ராஜூ.

அவர்கள் இருவரையும் அமைகாக்கும் படி தலைமை உத்தரவிட்டுள்ளதால் இனி அடக்கி வாசிப்பது என முடிவெடுத்திருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் இந்த சம்பவம். பழநியில் நடந்த கூட்டுறவுத்துறை விழாவிற்கு வந்த, திண்டுக்கல் சீனிவாசனை வாழ்த்தி, சிவகிரி ஊராட்சி அதிமுக நிர்வாகிகள் 2 பேர் பிளக்ஸ் வைத்திருந்தார்கள். அதில் ‘ஆளுமையே வருக... வருக...’ என்று  அமர்க்களமான வாசகம் வேறு இருந்திருக்கிறது.

இதைப்பார்த்த அமைச்சர் ஏராளமான அதிமுக தொண்டர்கள் முன்னிலையில், பிளக்ஸ் வைத்த 2 பேரையும் சகட்டு மேனிக்கு அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாராம். ‘இப்போதுதான் பிரச்னை இல்லாமல் பேச ஆரம்பிச்சு இருக்கேன்... என்னை சீண்டி விடறீங்களா..? இனிமேல் சாதாரணமா பிளக்ஸ் பேனர் வைங்க. என்னை புகழும்படி வார்த்தை ஜாலத்தை காட்டினீங்க... நானும் காட்ட வேண்டி வரும்’’ எனச் சொல்லி எச்சரித்தாராம்.

அமைச்சர் பொங்கியதை பார்த்த தொண்டர்கள், ’அப்பாட.. அமைச்சரின் வாய்க்கு பூட்டு போட்டுவிட்டார்களா?’ ஓய்ந்தது சர்ச்சை என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.