உள்ளாட்சி தேர்தலை கூட்டணியோடு எதிர்கொள்வது என்கிற நிலைப்பாட்டில் தேமுதிக உறுதியாக இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு மாற்று என்று ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக. 2006 சட்டப்பேரவை தேர்தல், 2009 நாடாளுமன்ற தேர்தலை அந்த கட்சி தனித்து சந்தித்தது. ஆனால் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது தேமுதிக.

இதன் பிறகு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை கூட்டணி அமைத்தே தேமுதிக எதிர்கொண்டது. தற்போது தேமுதிக மிகவும் பலவீனமான நிலையில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. முன்பெல்லாம் தேமுதிக தனக்கு என்று தனித்துவமான ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கும். ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் மறுத்துவிட்டார்.

இதே போல் கூட்டணி என்பதற்காக ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவும் விஜயகாந்த் ஒப்புக் கொள்ளவில்லை. அதே போல் தேர்தல் முடிந்த பிறகு தனது வழி தனி வழி என்கிற கொள்கையில் விஜயகாந்த் உறுதியுடன் இருந்தார். இதனால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்தை தேடி வந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையிலும் தேமுதிக கட்சி அதிமுகவுடன் முன்பை காட்டிலும் அதிகம் நெருங்கியுள்ளது. கூட்டணி குறித்து முன்பெல்லாம் கேட்டால் தேர்தல் சமயத்தில் முடிவு என்பது தான் தேமுதிக பிரமுகர்களின் கருத்தாக இருக்கும். ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசாரித்த போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையோடு உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தையையும் முடித்துவிட்டதாகவும் எனவே தான் அண்ணியார் அப்படி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இது தேமுதிகவின் புதிய பாதை என்று அவரது கட்சியினரே கூறுகின்றனர். அதாவது இனி திமுக அல்லது அதிமுக அல்லது பாஜக என ஏதோ ஒரு கட்சி மீது சவாரி செய்வது தான் தேமுதிகவின் வியூகமாம்.