உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அதிமுக நிர்வாகிகள் கூட்டம் ஜெயலலிதா இருக்கும் போது நடைபெறும் கூட்டத்தை போல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி கொடுத்த நம்பிக்கையுடன் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்து வெற்றி பெற அதிமுக ஏற்கனவே வியூகம் வகுத்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட அதிமுக தலைமை ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவுடன் மட்டும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இதனால் தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். இருந்தாலும் நவம்பர் 20ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்க சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி – துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இந்த கூட்டம் கூடியது.

நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அனல் பறந்தது. தொகுதியை கேட்டு ஒரு சிலர் பிரச்சனை செய்ததால் காரசாரமாக கூட்டம் நடைபெற்று முடிந்தது. நாற்காலிகள் கூட வீசப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் இந்த கூட்டம் ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக கூட்டம் எப்படி நடக்குமோ? அதே போல் நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் முடிவு தான் நம்மை சட்டமன்ற தேர்தல் வியூகத்திற்கு தயார்படுத்தும்.

உள்ளாட்சித் தேர்தல் தான் என்று மாவட்டச் செயலாளர்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. மேயர் பதவி மட்டும் அல்ல ஒவ்வொரு ஊராட்சி மன்ற தலைவர் பதவியும் நமக்கு முக்கியம். அதிமுகவினர் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் வெல்ல வேண்டும். வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

வேட்பாளர் தேர்வில் ஏதாவது தில்லுமுல்லு நடந்தால் அதற்கு மாவட்டச் செயலாளர்கள் தான் பொறுப்பு. இதே போல் மேயர் பதவியாக இருந்தாலும் சரி ஊராட்சி கவுன்சிலராக இருந்தாலும் சரி, சரியான வேட்பாளரை தேர்வு செய்து கொடுக்க வேண்டியது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு. தோல்வி கிடைக்கும் பட்சத்தில் அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும், இல்லை என்றால் நடவடிக்கை தான் என்று முடித்துள்ளார் எடப்பாடியார்.

ஆனால் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பெரிய அளவில் கூட்டத்தில் பேசவில்லை என்கிறார்கள். ஜெயலலிதா இருந்தது போல் பணியாற்றி வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்று அவர் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.