ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்தும் எதிர்பார்த்தபடி நிகழ்ந்ததால் அதிமுக தரப்பு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

ஒரு வழியாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தலை அதிமுக ஒரு திருவிழா போல கொண்டாட, திமுகவோ தேர்தலை வேண்டா வெறுப்பாக எதிர்கொண்டது கண் கூடாக தெரிந்தது. தேர்தல் நடந்து முடிந்த நிலையிலும் கூட திமுக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உயர்நீதிமன்றம் சென்றது.

பெரும்பாலும் இந்த அமைப்பு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவே செயல்படக்கூடியது. ஆனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு தடை கேட்டு சட்டப்பஞ்சாயத்து அமைப்பு நீதிமன்றம் சென்றது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதற்கு முன்னதாக சென்னையில் சாலை அமைத்ததில் எம் சாண்ட் ஊழல் என்பதை சட்டப்பஞ்சாயத்து இயக்கம் அம்பலமாக்கியது. அதனை வலுவாக பிடித்துக் கொண்டு ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதனால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு தடை கேட்டு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் உயர்நீதிமன்றம் சென்றதன் பின்னணியில் திமுக உள்ளதாக அதிமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் உயர்நீதிமன்றமோ தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை என்று கூறிவிட்டது. இதனால் தேர்தல் முடிந்த உற்சாகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு அதிமுக தரப்பு தயாராகியுள்ளது. ஏற்கனவே எடுத்த முடிவின் படி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கச்சிதமாக அதிமுக பணியாற்றியதாக சொல்கிறார்கள்.

அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டியவர்களுக் இடங்களை பெற்றுக் கொடுத்து விட்டமின் ப மூலமாக மஞ்சள் குளித்துவிட்டதாகவும் பேசுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் தலைமையிடம் இருந்து அமைச்சர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் செலவுக்கு கணிசமாக பணம் வந்ததாக கூறுகிறார்கள். இதனால் தேர்தல் முடிவு நாளன்று தீபாவளி கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது அதிமுக.