ஊரக உள்ளாட்சித் தேர்தல்..! திக்கு தெரியாமல் தவிக்கும் அமமுக..! என்ன செய்வார் டிடிவி?
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது கஷ்டம் தான் என்கிறார்கள். அப்படியே போட்டியிட்டாலும் கூட பிரச்சாரத்திற்கு டிடிவி வருவது சாத்தியம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 9 மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக முதல் நேற்று வந்த மநீம வரை வேட்பு மனு தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வைத்து தனது மகளின் திருமணத்தை முடித்த கையோடு டிடிவி தினகரன் தேர்தல் களத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடுத்து திருமணத்தை முடித்து சென்னை திரும்பிய டிடிவியை பார்க்க ஒன்பது மாவட்டங்களின் நிர்வாகிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்திருந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் டிடிவி பார்க்கவில்லை. நேராக கட்சி அலுவலகம் செல்லுமாறு மட்டும் அவர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டு நாட்களாக சென்னையில் தங்கியிருந்தும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தினகரனிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
இதனை அடுத்து நிர்வாகிகள் அனைவரும் மறுபடியும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர். வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. கூட்டணியில் இருந்த தேமுதிக கூட தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டு பணிகளை தொடங்கிவிட்டது. ஆனால் அமமுக நிர்வாகிகள் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து அமமுக வட்டாரத்தில் விசாரித்த போது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் தினகரன் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். மேலும் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் எந்த ஒரு மாவட்டத்திலும் கட்சிக்கு என்று பலமான கட்டமைப்பு இல்லை என்பதை தினகரன் உணர்ந்தே வைத்துள்ளார்.
ஏற்கனவே அந்த மாவட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலரும் அதிமுகவிற்கு மறுபடியும் சென்றுவிட்டனர். தற்போது காலியாக உள்ள இடங்களை கூட நிர்வாகிகளை போட்டு நிரப்பும் பணிகள் முடிவடையவில்லை. இந்த சூழலில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கினால் வெற்றி கிடைக்காது என்று தினகரன் நம்புவதாக சொல்கிறார்கள். அத்தோடு அவர் மகள் திருமணம் உள்ளிட்ட விஷயங்களில் பிசியாக இருப்பதால் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவது கஷ்டம் தான் என்கிறார்கள். அப்படியே போட்டியிட்டாலும் கூட பிரச்சாரத்திற்கு டிடிவி வருவது சாத்தியம் இல்லை என்றும் சொல்கிறார்கள். எனவே அந்தந்த மாவட்டங்களில் அமமுக சார்பில் விருப்பம் உள்ளவர்கள்போட்டியிட்டுக் கொள்ளுங்கள் என்கிற அறிவிப்பை ரகசியமாக டிடிவி வெளியிட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வார் என்றே பேச்சு அடிபடுகிறது.