உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறிய ரஜினி, அடுத்த நாளே மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கண்டிப்பாக பிறப்பித்துள்ள உத்தரவு ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியுடன் இணைந்து பணியாற்றிய ரஜினி ரசிகர்கள் பலர் அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டனர். பெரும்பாலான மாவட்டங்களில் ரஜினி ரசிகர் மன்ற கொடிகளுடன் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். கணிசமான அளவில் ரஜினி ரசிகர்கள் வார்டு கவுன்சிலர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதே பாணியில் கடந்த 2001, 2006 மற்றும் 2011 தேர்தலில் கூட ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் பெயரிலேயே களம் கண்டனர். அந்த வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் ரஜினி ரசிகர்கள் இந்த முறையும் சுயேட்சை என்கிற பெயரில் களம் இறங்க தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தான் ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுதாகர் அனைத்து மாவட்ட தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்றத்தின் பெயரை யாரும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடாது என்று கண்டிப்பாக பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து மாவட்ட வாரியாக ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர்களை தொடர்பு கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் எந்த காரணத்தை கொண்டும் தலைவர் பெயரையும், ரசிகர் மன்ற கொடியையும் பயன்படுத்தக்கூடாது என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை கேட்டு ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். அதற்கு முன்னதாக 2001ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள் போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றனர்.

இந்த வெற்றி கொடுத்த உத்வேகம் தான் விஜயகாந்தை அடுத்த சில ஆண்டுகளில் கட்சி துவங்க வைத்தது. அந்த அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் தலைமை தங்களை ஆதரிக்கும் என்று நம்பி பல்வேறு இடங்களில் போட்டியிடட ரசிகர்கள் ஆயத்தமாகினர். ஆனால் ரஜினியோ தனது பெயரை உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார். சரி சுயேட்சையாக களம் இறங்கலாம் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் தயாராகினர்.

ஆனால் அதற்கும் தடை என்று மக்கள் மன்றம் கூறியுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக கவுன்சிலர்களாகவும், ஊராட்சி மன்ற தலைவர்களாகவும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். என்ன ஆனாலும் சரி என்று சிலர் இந்த முறையும் களம் இறங்க தயாராகியுள்ளனர்.