சேலம் சிலுவம்பாளையத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வந்தார். அவருக்கு சேலம் விமான நிலையத்தில் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து காரில் தனது சொந்த ஊரான எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்திற்கு பகல் 12.25 மணி அளவில் குடும்பத்துடன் சென்றார். அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடி மையத்தில் சாமானிய மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா, மகன் நிதின்குமார், மருமகள் சங்கீதா ஆகியோரும் வாக்கு பதிவு செய்தனர். 

ஏற்கனவே நெடுங்குளம் கிராம ஊராட்சிக்கான 9 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகிவிட்ட நிலையில் நெடுங்குளம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.