தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின.

ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று  காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்குச்சீட்டுகளை பிரித்து எண்ண வேண்டி இருந்ததால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. முதலில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான முடிவுகளும், அதைத்தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான முடிவுகளும் வெளியாயின.

கட்சி ரீதியாக தேர்தல் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்தது. இதனால் அவற்றுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாவதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது.


ஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தமட்டில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. இன்று காலை 6  மணி நிலவரப்படி திமுக 1725 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 105  இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு  71 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 19 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

இதேபோல் அ.தி.மு.க. 1491 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான பா.ஜனதா 77, பாமக  86 இடங்களிலும், தே.மு.தி.க70  இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. பிற கட்சிகள் 208 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன.

இதே போல் மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களிலும் தி.மு.க. கூட்டணி முன்னணியில் இருந்தது. மொத்தம் உள்ள 515 இடங்களில் தி.மு.க. 200  இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு  4  இடங்களிலும், , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன. அ.தி.மு.க.வுக்கு 183  இடங்கள் கிடைத்து இருந்தன.

9,624 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கான தேர்தலில் 3,588 இடங்களுக்கான முடிவுகளும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலில் 26 ஆயிரத்து 99 இடங்களுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.